மதுபோதை காரணமாக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தொண்டி பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலரை தாக்கிய திமுக சேர்மன் மகன இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியின் 12-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பார்த்திபன் (வயது 35). இவர் கடந்த 12-ம் தேதி மாலை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்ததும், பேரூராட்சித் தலைவரிடம் 12-வது வார்டில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பார்த்திபன் கேட்டதாகத் தெரிகிறது.
அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகானின் மகன் நவ்பல் மற்றும் அவரது உறவினர் தவ்பீக் ஆகியோர் சேர்ந்து, கவுன்சிலர் பார்த்திபனை அவதூறாகப் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த கவுன்சிலர் பார்த்திபன் சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தொண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நவ்பல் மற்றும் தவ்பீக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில், இச்சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தொண்டி போலீசில் அளித்த புகார் மனுவில், கவுன்சிலர் பார்த்திபன் மதுபோதையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அலுவலகப் பொருட்களை உடைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனைத் தடுக்க வந்த பேரூராட்சி தலைவரின் மகன் நவ்பலைத் தரக்குறைவாகப் பேசியபோது, மதுபோதை காரணமாகக் கவுன்சிலர் பார்த்திபன் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கவுன்சிலர் பார்த்திபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


