நாகை அருகே திமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்
நாகை அருகே திமுக நிர்வாகி மீது இரும்பு கம்பி கொண்டு மூன்று பேர் கொலைவெறி தாக்குதல்: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் : மூவர் மீது வழக்கு பதிவு.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது கடந்த ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலப்பிடாகை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டிபன் வாங்குவதற்காக ரவிச்சந்திரன் வந்தபோது முன்விரோதம் காரணமாக இவருக்கும் வெண்மணி தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியது.
அப்போது சிந்தாமணி பகுதியில் உள்ள அரசு நியாய விலை கடை விற்பனையாளரான வெண்மணி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து ரவிச்சந்திரனை இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது வெளியான காட்சிகளில், மூவர் சேர்ந்து ரவிச்சந்திரனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வெண்மணி, சிவராமன், ராஜா ஆகிய மூவர் மீது ஆயுதம் கொண்டு தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


