சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தர்ணா
சபாநாயகர் தேர்தலை நடத்த கோரி புதுச்சேரி சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தர்ணா.. பதாகைகளை ஏந்தி கோஷம்
புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் முடிந்து மே 4ந் தேதி முடிவுகள் வெளியானது.
தேர்தல் முடிந்த பிற மாநிலங்களில் புதிய ஆட்சி பொறுப்பேற்று அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு, சட்டமன்றமும் கூடியுள்ளது. அதோடு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
ஆனால் புதுச்சேரியில் தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு மே 13ந் தேதி முதல்அமைச்சர், 2 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு ஜூன் 17ந் தேதி மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ஆனால் இப்போது வரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை. அதுமட்டுமின்றி சபாநாயகர், துணை சபநாயகர் தேர்தலும் நடைபெறவில்லை. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால், அவர்கள் சட்டசபை வளாகத்துக்கு பெரும்பாலும் வருவதில்லை.
இதனால் தேர்தலுக்கு முந்தையை நிலையில் இருந்ததுபோல சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.தேர்தல் முடிவுகள் வெளியாகி நாளை மறுநாளுடன் (சனிக்கிழமை) 2 மாதம் முடிவடைய உள்ளது.

இதனிடையே இன்று காலை 11 மணி முதல சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வந்தனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் நாஜிம் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ்கண்ணன் ஆகிய 5 எம்எல்ஏக்கள் கைகளில் பதாகை ஏந்தி சட்டசபை மைய மண்டபம் செல்லும் படிக்கட்டு முன்பு நின்றனர்.
அங்கு வேண்டும், வேண்டும், நிரந்தர சபாநாயகர் வேண்டும்? என்ன இலாகா? எந்த அமைச்சருக்கு? என கோஷம் எழுப்பினர். பின்னர் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.


