in

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டித் திருவிழா

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டித் திருவிழா

 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது: உச்சிக்கால பூஜையில் மலைக்கோயில் மூலவருக்கு முதலில் காப்பு கட்டப்பட்டது! சஷ்டி விரதத்தைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், நிகழும் பராபவ ஆண்டு ஐப்பசி 24-ஆம் நாளான இன்று (10-11-2026, செவ்வாய்க்கிழமை) கந்தர் சஷ்டித் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.

​விழாவின் முதலாம் திருநாளான இன்று பகல் 12 மணியளவில் மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை மற்றும் கல்ப பூஜைகள் நடைபெற்றன. பூஜை நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு முதலில் புனிதக் காப்பு கட்டினர்.

​அதனைத் தொடர்ந்து, துவார பாலகர்கள், விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை மற்றும் உற்சவ மூர்த்தியான சின்னக்குமாரசுவாமி ஆகியோருக்குக் காப்பு கட்டப்பட்டுச் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குக் காப்பு கட்டப்பட்டதைத் தொடர்ந்து, சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் கோயில் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டி விட்டனர்.

​இதேபோல், மூன்றாம் படைவீடான அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலிலும் காப்பு கட்டுதல் வைபவம் சிறப்பாக நடைபெற்று பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர்.

​தொடர்ந்து இன்று மாலை 5.20 மணிக்குத் தங்கச்சப்பரமும், இரவு 7.15 மணிக்குத் தங்கரதப் புறப்பாடும் நடைபெறவுள்ளன. 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதி மாலையும், திருக்கல்யாண வைபவம் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

What do you think?

மகா ஸ்கந்த சஷ்டி பெரு விழா

கிழக்கு கடற்கரை சாலை – காரங்காடு இணைப்பு சாலையில் மண் அரிப்பு: உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்!