சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம்
திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை ஒட்டி கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம்,தீபாரணை நடைபெற்றது. மேலும் உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து 11-ஆம் தேதி முருகப்பெரு மான் சிவபூஜை திருக்காட்சி, மறுநாள் முருகப்பெருமான் சிவ உபதேச திருக்காட்சி,13-ஆம் தேதி அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளும் நிகழ்ச்சி, 14-ஆம் தேதி வேல்வாங்கும் திருக்காட்சி ஆகியவை நடை பெறுகிறது.
பின்னர் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
மறுநாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


