சேத்தியாத்தோப்பில் எறும்பு மருந்தை உட்கொண்ட இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மெடிக்கலில் வைத்தியம் பார்த்ததால் இளைஞர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள பு.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல்காந்தி (23), குடும்பப் பிரச்சினை காரணமாக எறும்பு மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை சேத்தியாத்தோப்பில் செயல்பட்டு வரும் அன்பு மெடிக்கலுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சுமார் இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி அன்பு மெடிக்கலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அன்பு மெடிக்கலை நடத்தி வரும் தவெக நிர்வாகி ஆனந்தபாபுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறை விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே தெரியவரும் என குறிப்பிடத்தக்கது.


