in

மகளிர் காவல் நிலையத்தில் கைகலப்பு: பெண் ஆய்வாளர் மீது அடி விழுந்ததால் பரபரப்பு, 2 பேர் கைது

மகளிர் காவல் நிலையத்தில் கைகலப்பு: பெண் ஆய்வாளர் மீது அடி விழுந்ததால் பரபரப்பு, 2 பேர் கைது

மனைவியை அழைக்க வந்த கணவனுக்கும் அண்ணனுக்கும் இடையே மோதல்: நீதிமன்றக் காவலில் அடைப்பு

மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட கைகலப்பில், பெண் காவல் ஆய்வாளர் மீது அடி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த சிரஞ்சீவி (36) என்பவருக்கும், வானகரத்தைச் சேர்ந்த சுதா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதுகுறித்து மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, ஆறு மாதங்களில் கணவருடன் சேர்ந்து வாழ வருவதாகச் சுதா போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆறு மாதக் கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தன் மனைவியைச் சேர்ந்து வாழ வருமாறு அழைக்க அல்லது விவாகரத்து வழங்கக் கோரி சிரஞ்சீவி இன்று காவல் நிலையத்தில் முறையிட்டார். இதற்காகச் சுதாவின் குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த தனது குழந்தையைச் சிரஞ்சீவி தூக்க முயன்றபோது, சுதா அவரை தடுத்துள்ளார்.

இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, சுதாவின் அண்ணன் கார்த்திக்கும் சிரஞ்சீவியும் காவல் நிலையத்திற்குள்ளேயே நேரடியாகக் கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இந்த மோதலைத் தடுக்க முயன்ற மகளிர் காவல் ஆய்வாளர் மீது எதிர்பாராதவிதமாக ஒரு அடி விழுந்தது.

இதனால் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்திற்குள் அராஜகத்தில் ஈடுபட்டு அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாகக் கார்த்திக் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

What do you think?

மதுரவாயல் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்க முயன்ற தவெக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கருப்புக்கொடிகளுடன் புறப்படும் கருஞ்சட்டைப்படை: வைகோ அறிவிப்பு