பட்டணபிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனம் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்து தூக்கி நடைபெற்ற
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா, குரு முதல்வரின் குருபூஜைவிழா மற்றும் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா கடந்த மே 28ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்றது.11 ஆம் நாள் திருவிழாவாக குருமுதல்வர் குருபூஜை விழாவும்,முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் அமர்ந்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா இரவு கோலாகலமாக நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து தூக்கி சென்றனர்.அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம், செம்மறிஆடு, உள்ளிட்ட பரிவாரங்களுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் சிவபுர ஆதீனம்,சைலாபுரி ஆதீனம்,திருப்பனந்தாள் ஆதினம் ஆகிய ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள்,தருமையாதீனப் பாடகர் வேல்முருகன்,உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்,திமுக வழக்குரைஞர் ராம.சேயோன்,மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, சீர்காழி தமிழ் சங்க நிறுவனர் மார்கோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


