in

புதுச்சேரியில் பெண் பூனையான ஜிஞ்சுக்கு வளைகாப்பு…

புதுச்சேரியில் பெண் பூனையான ஜிஞ்சுக்கு வளைகாப்பு…

புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் – ரூபி தம்பதியினர்.

இவர்களது வீட்டில் ஜிஞ்சு என்ற பெயரில் பெண் பூனையினை வளர்த்து வருகின்றனர்.

இப் பூனை அவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த தெருவில் இருப்பவர்களுக்கும் செல்லப்பிராணியாக மாறிவிட்டது.

தெருவில் இருக்கும் குழந்தைகளின் வீட்டிற்கு அடிக்கடி ஜிஞ்சு செல்வதும், அதனுடன் அவர்கள் விளையாடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அப்படி அவர்கள் விளையாடும்போது குழந்தைகளின் குடும்பத்தினர் சொல்வதையும் ஜிஞ்சு கேட்டு அதன்படி நடக்கும் என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜிஞ்சுவின் மீது மிகவும் பிரியத்துடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றரை வயதாகும் ஜிஞ்சு தற்போது கர்ப்பமாக உள்ளது.இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பெண் பூனையான ஜிஞ்சுக்கு வளைகாப்பு செய்வது என முடிவெடுத்தனர்.

இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகேயன் – ரூபி தம்பதியினரும்
வளைகாப்புக்கான ஏற்பாடுகளை தங்களது வீட்டில் செய்து இருந்தனர்.

வீட்டினை அலங்கரித்து ஜிஞ்சுக்கு தனியாக சேர் போட்டு அமர வைத்தனர்.

முருகன் கோயில் தெரு மட்டுமல்லாது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற வீதிகளின் பொதுமக்களும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அவர்கள் பெண் பூனை ஜிஞ்சுக்கு மிகவும் பிடித்த உணவுகளான மீன், இறா ,சிக்கன், முட்டை, தயிர் சாதம், பால் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளையும் செய்து விழாவிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் அப்பகுதி பெண்கள் பூ, வளையல், வாழைப்பழம் பலாப்பழம் தேங்காய் பப்பாளி பழம் ஆப்பிள், அவித்த காய்கறிகள் உள்ளிட்டவற்றை தட்டு வரிசையாக
ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

விழாவிற்கு வந்த கிராம பொதுமக்கள் ஜிஞ்சுக்கு பூ பொட்டு சந்தனம் குங்குமம் ஆகியவை வைத்து நலங்கு வைத்தனர்.தொடர்ந்து ஆரத்தி எடுத்தும் மகிழ்ந்தனர்.

புளி சாதம் லெமன் சாதம் உள்ளிட்ட கலவை சாதம் வகைகளையும் செய்து வைத்து படைத்தனர்.

பொதுமக்கள் மட்டுமல்லாது கார்த்திகேயன் தம்பதியினரின் உறவினர்கள், நண்பர்கள் அப்பகுதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்கள் பிளாஸ்டிக் டப்பாவை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஜிஞ்சுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

செல்லப் பிராணியான பூனைக்கு பெண்களுக்கு செய்வது போல் கிராம பொதுமக்கள் அனைவரும் திரண்டு வளைகாப்பு நிகழ்ச்சி யினை நடத்தியது திருக்கனூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத்துடன் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

What do you think?

திருவாடானையில் அஞ்சலை அம்மாள் 136-வது பிறந்தநாள் விழா

புதுச்சேரி…சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை.