in

தூத்துக்குடியில் கோலாகலமாக நிறைவடைந்த 5-வது ‘நெய்தல்’ கலைத் திருவிழா – கனிமொழி எம்.பி. பெருமிதம்

தூத்துக்குடியில் கோலாகலமாக நிறைவடைந்த 5-வது ‘நெய்தல்’ கலைத் திருவிழா – கனிமொழி எம்.பி. பெருமிதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 5-வது ‘நெய்தல்’ கலைத் திருவிழா 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று நேற்று இரவு நிறைவடைந்தது. இந்த விழாவுக்கு தூத்துக்குடி மக்களிடையே தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக கனிமொழி எம்.பி. பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கிய இந்த கலைத் திருவிழா, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் முன்னெடுப்பில் நடைபெற்றது.

நிறைவு விழாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள்

சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரசாந்த், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, நிறைவு விழாவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய கனிமொழி எம்.பி., “தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. புதிய கலைஞர்களின் திறமையை பாராட்டி மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக உள்ளது” என்றார்.

மேலும், விழாவை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த பொதுமக்கள், காவல்துறையினர், அரசுத் துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், குஜராத் மாநிலத்தின் ‘சித்தி கோமா’ நடனமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் வகையில் 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும், நேரடி உற்பத்தியாளர்களின் சுயதொழில் பொருட்கள் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

3 நாட்கள் நடைபெற்ற கலைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

What do you think?

திருப்பதி மலையில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி கருட வாகன புறப்பாடு

திரௌபதி அம்மன் கோவில் திருவிழா: பீமன், திரௌபதி வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா