in

சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் அவலம்!

சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் அவலம்!

 

சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் அவலம்! காய்ந்து கருகிய வயல்களில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அம்மாபேட்டை, புத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் சூல் பிடிக்கும் பருவத்தில் போதிய தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகின்றன.

வயல்களில் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாததால் நிலங்கள் பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகின்றன. நெற்பயிர்கள் வளர்ந்து கதிர் உருவாக வேண்டிய முக்கியமான தருணத்தில் தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடி, காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடிக்காகச் செய்துள்ள செலவுகள் அனைத்தும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவின் முக்கிய வாழ்வாதாரமான சம்பா சாகுபடி தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காய்ந்து கருகிய சம்பா வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தவெக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், காவிரி நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரத்தைப் போக்குவதில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்:
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சம்பா பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும்.

தண்ணீரின்றி காய்ந்து கருகிய சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உரிய நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு மாற்றுப் பாசன வசதிகளை ஏற்படுத்தி, தேவையான இடங்களில் மின்சாரம் மற்றும் பாசன நீர் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

சம்பா சாகுபடியை நம்பி வாழும் விவசாயிகள் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் பயிர் பாதிப்புகளைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.

What do you think?

ராட்சத டபராக்களில் தயாராகும் அறுசுவை அன்னதானம்