திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளி மாவட்டங்களுக்கும், தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து வருகின்றனர்.
தென் தமிழகத்தின் நுழைவாயிலாக விளங்கும் திண்டுக்கல்லில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது பேருந்து நிலைய வளாகத்தில் பெண்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல்துறையினரின் ரோந்து பணிகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எஸ்.பி. பிரதீப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கருணாகரன், ரமேஷ், நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்தி, நகர வடக்கு காவல் ஆய்வாளர் பாலமுருகன், 5 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நகர உட்கோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 20 ரோந்து காவலர்கள் கலந்து கொண்டனர்.


