இளம்பெண்ணுக்கு குறுஞ்செய்தி தொல்லை – கண்டித்ததால் கத்தியால் குத்திய நபர் கைது
கும்பகோணத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டாக்டர் பெசண்ட் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்பு ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றியபோது, அருகில் உள்ள மற்றொரு ஆடிட்டர் அலுவலக ஊழியர் செந்தில்குமரன் (42) என்பவருடன் வேலை நிமித்தம் பேசி வந்துள்ளார்.
அந்த பெண் தனியார் நிதி நிறுவனத்திற்கு வேலைக்கு மாறிய பிறகும், செந்தில்குமரன் அவருக்கு ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அந்த பெண் செந்தில்குமரனின் மனைவியிடமும், ஆடிட்டர் நிறுவன உரிமையாளரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் மாலை ஆடிட்டர் அலுவலகத்திற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமரன் அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


