மது போதையில் பள்ளி வேன் ஓட்டியதாக குற்றச்சாட்டு
மது போதையில் பள்ளி வேன் ஓட்டியதாக குற்றச்சாட்டு – மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் விபத்துக்குள்ளாகும் நிலையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மாணவர்களை தினமும் வேனில் அழைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை ஆவட்டி–கல்லூர் சாலை வழியாக பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பொடையூர் கிராமத்திற்கு சென்ற வேன், பொடையூர் காட்டுப்பகுதியில் சாலை ஓரமாக சக்கரங்கள் பள்ளத்தில் இறங்கி கவிழும் நிலையில் நின்றது.
இதனால் வேனில் பயணம் செய்த மாணவர்கள் அச்சமடைந்து உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

வேன் ஓட்டுநர் மது போதையில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்த ஒரு காயம் ஏற்படாதது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


