திடீர் மின்வெட்டு: நோயாளிகள், செவிலியர்கள் அவதி
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் மின்வெட்டு: போதிய வெளிச்சமின்றி நோயாளிகள், செவிலியர்கள் அவதி.
நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நேற்று இரவு மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள உள்நோயாளிகள் பிரிவு வார்டில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

போதிய வெளிச்சம் இல்லாத சூழலில், நோயாளிகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்குவதில் செவிலியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மின்விசிறிகள் இயங்காததால் ஏற்பட்ட புழுக்கம் மற்றும் இருள் காரணமாக வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், அவர்களுக்கு உதவியாக வந்திருந்த உறவினர்களும் தவித்துப் போயினர்.
அவசர தேவைகளுக்கான ஜெனரேட்டர் வசதி உடனடியாக இயக்கப்படாததே இந்த நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இங்கு அடிக்கடி இதுபோன்று மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், அவசர காலங்களில் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதி தடையில்லா மின்சாரத்தை உறுதிசெய்யும் வகையில் ஜெனரேட்டர் வசதியை உடனடியாகச் சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


