அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த யானைக்கு உற்சாக வரவேற்பு
அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த யானைக்கு உற்சாக வரவேற்பு பக்தர்கள் மகிழ்ச்சி…..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆண் யானை வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு கோவிலில் உள்ள யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள்.
மேலும் கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும் போது உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம்.
மகா தீப விழாவின் போது தீப கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகு தான் 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவர். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி கோவில் வளாகத்தில் யானை ருக்கு இறந்தது. பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏழு வயதில் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த யானை ருக்கு சுமார் 23 ஆண்டுகள் ஆன்மிக பணியை சிறப்பாக செய்தது. தனது 30-வது வயதில் ருக்கு மரணம் அடைந்தது.
ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

யானை ருக்கு இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று ஆண் குட்டி யானை கொண்டு வரப்பட உள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனத்தில் ஏற்றி கொண்டு வரப்படும் யானை அண்ணாமலையார் கோவிலை வந்தடைந்து.
8 வயதுடைய இதன் பெயர் ஹீராலால். இந்த யானை 6 அடி உயரம் கொண்டது. கோவிலுக்கு வந்த யானைக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் ராஜகோபுரம் எதிரில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வாழ்க வளமுடன் சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வரவேற்றனர். புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலைக்கு வருகை தந்த புதிய யானையை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.


