வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு புதிய யானை கொண்டு வரப்பட்டது
புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை கொண்டு வரப்பட்டது, தருமபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து யானையை வரவேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது, நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இது புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும்.
இந்த ஆலயத்திற்கு சொந்தமான தையல்நாயகி கடந்த 2003 ஆம் ஆண்டு, உடல்நல குறைவு காரணமாக யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
வயது மூப்பு காரணமாக அந்த யானை உயிரிழந்த நிலையில், ஆலயத்திற்கு புது யானை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து யானை கொண்டு வருவதற்கு தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காத நிலையில், உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தமிழகத்தில் ஐந்து கோயில்களுக்கு யானைகள் வழங்க தடையில்லா சான்று வனத்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் சார்பில் அசாமில் இருந்து 13 வயது ஆண் யானை வாங்கப்பட்டு இன்று கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது.
தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் யானைக்கு சிறப்பு கஜ பூஜை செய்யப்பட்டது.
பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு ஆலயத்தில் யானை ஒப்படைக்கப்பட்டது. சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் ஆனந்தீஸ்வரர், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


