in

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் அறுபத்து மூவர் பெருவிழா கோலாகலம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் அறுபத்து மூவர் பெருவிழா கோலாகலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அறுபத்து மூவர் பெருவிழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், சைவ சமயத்தின் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டு நாயன்மார்களை வழிபட்டு அருளாசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அறம் வளர் நாயகி அம்மை உடனமர் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் தர்மசம்வர்த்தினி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வாகனத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவீதிகளில் பக்தர்கள் “ஓம் நமசிவாய” என்ற சிவநாமம் முழங்க சுவாமியை வழிபட்டனர். பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வரவேற்றதுடன், வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இந்த அறுபத்து மூவர் பெருவிழாவில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

ஆடி ஞாயிறு: முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

தமிழ்நாடு, புதுச்சேரியில் கோழி வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்