நல்ல கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
பழனி இந்திரா நகர் அருள்மிகு நல்ல கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பழனி நகரின் மையத்தில் இந்திராநகரில் உள்ளது அருள்மிகு கன்னிமூல வலம்புரி விநாயகர், அன்னை வீரமாட்சியம்மன், நல்ல கருப்பணசாமி கோயில், இந்த கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து பழனியில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு தீர்த்தம் எடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேக பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
நேற்று காலை விநாயகர் அனுமதி பெறப்பட்டு மாலையில் முதல்கால யாகபூஜைகள் துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள், கருப்பணசாமி பரிவார தெய்வங்களுக்கு அருள்நிலை செய்தல், கலசங்கள் ஞானஉலா செய்தல் ஆகியன செய்யப்பட்டு மஹா தீபாராதனையும், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.

தொடர்ந்து கலசங்கள் கோயில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காலை 9 மணிக்கு மேல் கோபுர விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து அருள்மிகு நல்லகருப்பணசாமிக்கு மஹாகும்பாபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலமாக தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை சிவாகமரத்னா தேவசேனாபதி குருக்கள் மற்றும் சிவாச்சார்யார்கள் செய்தனர்.
