ரெஸ்ட்ரோபார் உள்ளிட்ட மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் போராட்டம்
புதுச்சேரி திருபுவனை தொகுதியில் குடியிருப்பு மற்றும் பள்ளி கல்லூரி அருகே உள்ள ரெஸ்ட்ரோபார் உள்ளிட்ட மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி தவெக எம்எல்ஏ சாய்.ஜெ. சரவணகுமார் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்.
புதுச்சேரி திருபுவனை தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் ரெஸ்ட்ரோ பார்கள் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மதுபான கடைகளால் சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த கடைகளை உடனடியாக அகற்றக்கோரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜெ. சரவணன் குமார் பொதுமக்களுடன் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போராட்டம் நடத்திய போது சுமார் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்ட மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும்,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் ரெஸ்ட்ரோ பார் மற்றும் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய் ஜெ சரவணகுமார் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டம் குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார் கூறும்போது…
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி அரசு அதனை பின்பற்றவில்லை எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்ட்ரோ பார் மற்றும் மதுபான கடைகளை மூடவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.


