in

ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 லாரிகள் பறிமுதல்


Watch – YouTube Click

ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண் திருட்டுக்கு இடையூறாக உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை மண் திருடர்கள் வெட்டி சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கருப்பட்டி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் கம்பிகுளம் கண்மாய் பகுதியில் தளவாய்புரம் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் 3 டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி சவுடு மண் கடத்தி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 26 யூனிட் மண்ணுடன் 3 லாரிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் மண் திருட்டில் ஈடுபட்டதாக சுரண்டையை சேர்ந்த மணி, முதுகுளத்தூரை சேர்ந்த சேது மற்றும் மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த துரை ஆகிய மூவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண் கடத்தி செல்லும் வழியில் இடையூறாக இருப்பதாக கூறி மண் திருடர்கள் அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புத்தூர், நல்ல மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளது.

கோடை காலத்தில் பதனீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி பிரதானமாக நடைபெறுவது வழக்கம். தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் பதனீர் இறக்குவதற்காக மரங்களை விவசாயிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மண் திருடுவதற்காக மரங்கள் வெட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், பனை மரங்களை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்

டாக்டர் ராமதாஸ் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்