“நன்றாகப் படித்தால்தான் கல்லூரிக்கு செல்ல முடியும்” – மாணவர்களிடம் முதல்வர் ரங்கசாமி அறிவுரை
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், முத்தியால்பேட்டை தொகுதி சோலைநகர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்விக்காக புதிதாக கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறுவதை கேட்டு நடக்க வேண்டும். நன்றாகப் படித்தால்தான் கல்லூரிக்கு செல்ல முடியும். மாணவர்கள் நல்ல சூழலில் படிப்பதற்காகவே அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் புதிய பள்ளிக் கட்டிடங்களை பார்வையிட்டனர்.
அப்போது வகுப்பறைக்குள் முதலமைச்சர் ரங்கசாமி வந்தபோது, மாணவர்கள் அனைவரும் “முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்” என்று உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்களின் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த முதலமைச்சர், அவர்களுக்கு சாக்லேட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் மாணவர்கள் சிறந்த கல்விச் சூழலில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


