நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளர்பிறை வழிபாடு
நாமக்கல் ராசிபுரத்தில் ஸ்ரீ ஞான வாராஹி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி வழிபாடு.
வளர்பிறை பஞ்சமியன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.
இராசிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ அமிர்த ராகு கேது மற்றும் ஸ்ரீ ஞான வாராஹி அம்பாள் பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வளர்பிறை பஞ்சமியில் வாராஹி அம்பாளை வழிபட்டால் பூர்வஜென்ம கர்மா விலகும், திருமண தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் கணேசன், தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள ஞான வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஏராளமான பெண்கள் அம்மனுக்கு நெய் தீபம், தேங்காயில் தீபம் ஏற்றி பல்வேறு வேண்டுதலுக்காக பிராத்தனை செய்தனர். இதனை தொடர்ந்து வாராஹி அம்பாளுக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக வாராஹி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வாராஹி அம்மனை வழிபட்டு சென்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


