போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாக பங்கேற்பு
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.
கபிஸ்தலம் பாலக்கரையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மாரத்தானை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு கொடியசைத்து தொடங்கி வைத்து. அவர் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஓடி, போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினார்.

இந்த மாரத்தானில் கும்பகோணம், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று சாதனை படைத்தனர். பொதுமக்களும் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்.
மாரத்தான் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாபநாசம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் லித்திஸ் என்ற மாணவன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், காலில் செருப்பு கூட இல்லாமல் 2 கி.மீ தூரத்தை ஓடி முதல் பரிசை தட்டிச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது விடாமுயற்சி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
“போதை வேண்டாம் – படிப்பு முக்கியம்”
“இளமையை காப்போம் – போதையை ஒழிப்போம்”
“ஆரோக்கியமான வாழ்வே நமது இலக்கு”
“விளையாட்டே வாழ்க்கை – போதை வேண்டாம்”
“Say No To Drugs – Yes To Life”
இளைய சமுதாயத்தை போதை என்ற சமூக தீமையில் இருந்து காக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் காவல்துறையினரும், லயன்ஸ் கிளப் நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.


