மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பக்தர்கள்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அம்மனுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், சித்தாங்கு வேடம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
பக்தர்களின் வருகை அதிகரித்ததன் காரணமாக, அம்மனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும், விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் மேல்மலையனூர் வந்தனர்.
இதன் காரணமாக வளத்தி–மேல்மலையனூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


