சுவாமிமலை திருக்கார்த்திகை தேரோட்டம்
சுவாமிமலையில் திருக்கார்த்திகை தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது சுவாமிமலை. பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயில் இது. தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதால், இத்தலத்தில் முருகப்பெருமான் சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.
நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலமும் இதுவாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு “முருகனுக்கு அரோகரா” என்று முழக்கங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் வீதியுலாவும், அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது.


