இளம்பெண்ணை நடுத்தெருவில் விட்ட பலே கில்லாடி ஏலகிரியில் கைது!
இன்ஸ்டா காதல் வலை… திருமண ஆசை காட்டி 16 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணத்துடன் எஸ்கேப்! இளம்பெண்ணை நடுத்தெருவில் விட்ட பலே கில்லாடி ஏலகிரியில் கைது!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஐ.டி ஊழியர் எனப் பொய் சொல்லி இளம்பெண்ணிடம் 16 சவரன் நகை மற்றும் பணத்தை மோசடி செய்த இளைஞரை ஓசூர் போலீசார் ஏலகிரி மலையில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் லண்டன் மெஷின் ரோடு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனின் மகன் கௌஷிக் (24). இவருக்கும், 24 வயது இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
தான் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறிய கௌஷிக், அந்தப் பெண்ணிடம் ரொக்கமாக 85 ஆயிரம் ரூபாய், கூகுள் பே மூலம் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் 16 சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்வதாகக் கூறி அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஓசூர் அழைத்து வந்த கௌஷிக், பேருந்து நிலையத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தப்பியுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், பெற்றோருடன் வந்து ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஓசூர் நகர காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஏலகிரி மலையில் பதுங்கியிருந்த கௌஷிக்கை கைது செய்தனர்.
விசாரணையில், பறித்த 16 சவரன் நகையில் 3 சவரனை விற்று சொகுசு பைக் வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் வேறு 3 பெண்களுடன் அவர் பழகி வந்ததைக் கண்டறிந்த போலீசார், அவர்களைத் தொடர்பு கொண்டு எச்சரித்தனர்.
கௌஷிக்கிடமிருந்து 9 சவரன் நகை மற்றும் சொகுசு பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் பழகி இளம்பெண்கள் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.


