முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் சிறையில் ஆய்வு
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் – சிறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்ட குழுவினர் சிறையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி 17 சிறைக் கைதிகள் சிறை காவலர்களை தாக்கி விட்டு சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பின்னர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து 36 மணி நேரத்தில் தப்பி ஓடிய 17 சிறை கைதிகளையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெவ்வேறு மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதே போல் சென்னை புழல், கோவை உள்ளிட சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் சிறையின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இந்த நிலையில் சிறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜே.கே திரிபாதி தலைமையில் மூவர் கொண்ட உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்தக் குழுவானது தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் ஆய்வு செய்வதற்காக இன்று வருகை தந்துள்ளனர்.

ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான குழுவில் சிறைத்துறையின் இயக்குனர் கூடுதல் டிஜிபி சங்கர், மற்றும் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக இருக்கின்றதா? கண்காணிப்பு டவரில் 24 நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா? மேலும் சிறை வளாகத்தில் போதுமான காவலர்கள் பணியில் உள்ளனரா?
சிறையின் நுழைவாயில்கள் முறையான விதிகளை பின்பற்றி மூடப்படுகிறதா? என்பது குறித்து இந்த குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்
தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சிறைகளில் ஆய்வு செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


