குற்றவாளிகளை எளிதில் கண்டறிய 2000 கண்காணிப்பு கேமராக்கள்
பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 2000 கண்காணிப்பு கேமராக்கள் அண்ணாமலையார் கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் பொருத்தம்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வரும் 15ம் தேதி அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பத்து நாட்கள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இதனை தொடர்ந்து வரும் 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த மகா தீப தரிசனத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக அண்ணாமலையார் கோவிலில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கிரிவலப் பாதையில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 1500 கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளது.


