போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளையொட்டி ட்ரோன் மூலம் அதிரடி சோதனை!
திருவண்ணாமலையில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் உத்தரவின் பெயரில் ட்ரோன் கேமரா மூலம் நகரின் பல்வேறு இடங்களில் தேர்தல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு இடங்களில் கள்ள சந்தையில் கஞ்சா மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரம் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது.
இந்த தகவலின் பெயரில் ஆய்வாளர் சிவசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் சோதனை செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள சமுத்திரகாலனி, கல்நகர், பாவாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிவசங்கர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் உள்ளதா என ட்ரோன் கேமிரா மூலம் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கள்ள சந்தையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் மதுபானம் விற்கும் நபர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


