in

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய திருத்தேரோட்டம்

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய திருத்தேரோட்டம்

 

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்டம்! பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் !

வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் – உலகம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா ஆண்டுதோறும் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 26ஆம் தேதி காலை உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலகம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, சங்கொலி முழங்க, சிவனடியார்கள் சங்குகளை ஊதியபடி முன்னே செல்ல, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் கொண்டு காணப்பட்டது. தொடர்ந்து தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நான்கு மாட வீதிகளிலும் அருள்பிரசாதங்கள் பக்தர்கள் வழங்கினார்..

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 5ஆம் தேதி இரவு உலகம்மன் சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்…

What do you think?

நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

நகர காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி