திருவாடானை தொகுதியில் தொடரும் சவடு மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சவடு மணல் அள்ள குறிப்பிட்ட அளவில் மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த அனுமதியைக் காட்டி, பல்வேறு கண்மாய்களில் அவசர அவசரமாகப் பத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் விதிகளை மீறி மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக மணல் அள்ளிச் கடத்தப்படுவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிகையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையின் அவசர உதவி எண் மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை (Control Room) ஆகியவற்றுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பாசிபட்டினம் கிராமத்திற்கு உட்பட்ட பாண்டிபரணி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது குறித்துப் பொறுப்பான அதிகாரிகளிடம் நேரில் புகார் அளித்தும், மணல் கொள்ளையைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இயற்கை வளங்களைச் சூறையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் கோரிக்கை எழுந்துள்ளது


