புதிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடக்கம்
விருத்தாசலம் அருகே ஆலடி ஊராட்சியில் புதிய கட்டிடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடக்கம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்டது.
புதுச்சேரி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி வங்கி சேவையை தொடங்கி வைத்தார். மேலும் 24 மணி நேரம் இயங்கும் ஏடிஎம் இயந்திரத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமப்புற மக்களுக்கு முழுமையான சேவையை வழங்கி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
பிஎம்ஜேஒய் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதில் சேர்ந்து பயனடையுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் முத்ரா கடன் திட்டம், கல்விக் கடன், இயற்கை வேளாண் கடன், தொழில் கடன், நகைக் கடன் போன்ற சேவைகளை சிறந்த முறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கி வருவதாக தெரிவித்தார். ஆலடி கிளை முழுக்க கிராமப்பகுதியை உள்ளடக்கியது என்றும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆலடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் பணியாளர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்….


