in

கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி ; நெஞ்சுவலிப் பெண் படுக்கையில் ஆண் நோயாளி 

கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி ; நெஞ்சுவலிப் பெண் படுக்கையில் ஆண் நோயாளி 

​ஒரே பெட்டில் மாற்றி, மாற்றி உட்கார வைக்கப்படும் நோயாளிகள் : தரம் கெட்ட மருத்துவ சேவையால் பொதுமக்கள் கொந்தளிப்பு

​கோவை அரசு தலைமை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் (Emergency Ward), கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பெண் நோயாளி ஒருவரின் படுக்கையிலேயே, மற்றொரு ஆண் நோயாளியையும் அமர வைத்துச் சிகிச்சை அளித்த அநாகரிகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

கோவையின் சுற்று வட்டார மாவட்ட மக்கள் அனைவருக்கும் முதன்மை மருத்துவ மையமாக விளங்கும் இந்த அரசு மருத்துவமனையில், அண்மைக் காலமாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன

இதன் உச்சக்கட்டமாக, நெஞ்சுவலி காரணமாக அவசரக் காலச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் அதே படுக்கையில் மற்றொரு ஆண் நோயாளியையும் படுக்க வைத்து உள்ளனர்.

​பின்னர், அந்த ஆணை எழுப்பி அதே பெட்டில் அமர வைத்து விட்டு, மீண்டும் மற்றொருவரை அங்கு அமர வைப்பது என அவசரச் சிகிச்சை பிரிவுக்கே உரிய எந்தவொரு அடிப்படை மருத்துவ விதிகளும் இல்லாமல் அங்கு உள்ள ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு உள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பகுதிக்கு (ICU) நிகரான எமெர்ஜென்சி வார்டுக்குச் சென்றாலும் கூட, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழலே நிலவுகிறது.

ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி ஒரே படுக்கையில் நோயாளிகளைத் திணிக்கும் இந்த அவல நிலை தொடர்ந்து அங்கு நீடித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களின் வேதனையை முன் வைக்கின்றனர்.

​இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை – எளிய மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து, மாவட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு (Intervention), அவசரச் சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

What do you think?

பிறந்தநாள் சிறப்பு முப்பெரும் விழா கோலாகலமாக கத்தாரில் கொண்டாடபட்டது

செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் .