வேளாங்கண்ணி மாதா குளம் ரோடு டாஸ்மாக் கடை மூடல் – 6 ஆண்டு பொதுமக்கள் போராட்டத்திற்கு வெற்றி
நாகை மாவட்டத்திலேயே ஒரு நாளைக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகும் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் கடை, பொதுமக்களின் 6 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று இன்று மூடப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் மாதா குளம் மெயின் ரோடு பகுதியில் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலை வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்தது.
இதனால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சுமார் 6 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த 717 கடைகள் நீக்கல் பட்டியலில் இந்த கடையும் இடம்பெற்றிருந்தது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாருடன் இணைந்து செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் இன்று மூடினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே ஒரு நாளுக்கு சுமார் பத்து லட்சத்திற்கு அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் கடை இது என்பது குறிப்பிடத்தக்கது. கடை மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்சி தெரிவித்தனர்.


