ஆய்வு செய்ய வந்த இடத்தில் செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டிய மீன்வளத்துறை அமைச்சர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்காமல் தவெகவினருடன் செல்பி, ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டியதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் அரசு நிகழ்ச்சியில் மேடையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அமர்ந்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மண்டபம் முனைக்காடு பகுதியில் பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவப் பெண்களை சந்தித்து பாசி வளர்ப்பது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மண்டபம் மேற்கு வாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவை பார்வையிட்டார்.
பின்னர் ராமேஸ்வரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு மீன்வளத்துறை அமைச்சர் சென்றார். அமைச்சர் வந்திருந்த செய்தி அறிந்த நூற்றுக்கணக்கான தவெகாவினர் அரசு விருந்தினர் மாளிகையில் குவிந்தனர்.
அமைச்சர் அறைக்கு செல்லும்போதும் அறையில் இருந்து வெளியே வரும்போதும், அறைக்குள்ளும் குழு குழுவாக சென்று செல்பி, மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். இப்போது செய்தியாளர்கள் ஆய்வு பணி குறித்து கேள்வி எழுப்பினர் ஆனால் செய்தியாளர்களை சந்திக்காமல் செல்ஃபி எடுத்த தவெகானருடன் செல்பி எடுப்பதில் அமைச்சர் அதிக ஆர்வம் காட்டினார்.
பின்னர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 28 பயனாளிகளுக்கு மீன் பிடி உபகரணங்களை வழங்கினார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ராமேஸ்வரத்தில் முதன்முதலாக அரசு விழாவில் கலந்து கொள்வதால் இலங்கை கடற்படையின் பிரச்சனை, தவெக அரசு சார்பில் மீனவர்களுக்கு செய்ய திட்டமிட்டு இருக்கும் திட்டங்கள் மற்றும் உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து மேடையில் அமைச்சர் பேசுவார் என மீனவர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் மீனவர்கள் மத்தியில் பேசாமலும், இலங்கை சிறையில் நீண்ட காலமாக இருக்கும் மீனவர்களின் குடும்பத்தினர் அமைச்சரிடம் மனு அளிக்க காத்திருந்த நிலையில் அந்த மனுகளை பெறாமல் நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்த தவெகவினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றார்.
ராமேஸ்வரம் மீன் பிடி இறங்குதலத்திற்கு அமைச்சர் ஆய்வு செய்ய வர இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் ராமேஸ்வரம் மீன் இறங்குதளத்தில் காத்திருந்த நிலையில் மீன் இறங்குதல் ஆய்வு செய்யாமல் சென்றது மீனவர்களை பெரிதும் ஏமாற்றம் அடைய செய்தது.
இதனிடையே ராமேஸ்வரத்தில் அமைச்சர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி மேடையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜூக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமைச்சர் வராததால் அவரது இருக்கையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி மற்றும் விழா மேடில் நகர தலைவர் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


