தேர்தல் பணியில் ஈடுபட்டு வெற்றிக்கு உதவிய திமுக ஒன்றிய செயலாளருக்கு வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி. உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு நேரில் சென்று நலம் விசாரித்து நன்றி தெரிவித்தார்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் முடிவில் அவர் வெற்றி பெற்றார். அவர் வெற்றிக்காக திமுகவின் ஒன்றிய, நகர செயலாளர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.
இதில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகரும் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகருக்கு காலில் எலும்பு ஏற்பட்டது இதற்காக காலில் தகடு பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சிதம்பரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மனோகர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இதையறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் டாக்டர் மனோகரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
இதையறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி திமுக கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம் அருகே அனுவம்பட்டு கிராமத்தில் உள்ள டாக்டர் மனோகரன் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு அவரை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவர் ஓய்வு எடுக்குமாறு கூறி, தேர்தலில் தனக்காக பணியாற்றி வெற்றி பெறச் செய்ததற்கு நன்றியும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


