ஓமனில் 2 மாதங்களாக தவித்த புதுச்சேரி பெண் மீட்பு! முதலமைச்சர் ரங்கசாமிக்கு கண்ணீர் மல்க நன்றி!
புதுச்சேரி திலாசுப்பேட்டையை சேர்ந்தவர் குப்பம்மாள், இவர் வீட்டு பணிப்பெண் வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாடு சென்றுள்ளார். சென்ற இடத்தில் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்றும் வேலை கிடைத்த இடத்தில் அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் புதுச்சேரியில் உள்ள தனது மகளிடம் முறையிட்டுள்ளார், இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து,ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது தாயை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனை அடுத்து புதுச்சேரி அரசு சார்பில் ஓமன் நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்ட அதிகாரிகள் அங்கு சிக்கி தவித்த குப்பமாளை புதுச்சேரிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின் பேரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பிய குப்பம்மாள் இன்று தனது மகளுடன், முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

