விளையாட்டில் இருந்த குழந்தை மீது வாகனம் மோதல் – பாசிப்பட்டினத்தில் பரபரப்பு
பாசிப்பட்டினத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து – கௌசல்யா தம்பதியின் 3 1/2 வயது மகள் ஷிவானிகா.
இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததை அறியாத பெற்றோர்கள், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஷிவானிகா காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை மீட்டு எஸ்பி பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் எஸ்பி பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தனியார் பள்ளி வாகனம் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஓரியூரைச் சேர்ந்த அந்தோணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


