பள்ளி மாணவியின் துயர முடிவு: செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் விபரீதம்
செல்போன் பயன்படுத்த கூடாது என தாயார் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை…
உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் தீவிர விசாரணை திருவண்ணாமலை பரபரப்பு…..
திருவண்ணாமலை மாநகராட்சி கிருஷ்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் வர்ஷா (16). இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து நடந்து முடிந்த பொது தேர்வில் 460 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் நல்ல மாணவி என்று பெயர் எடுத்துள்ளார்.
இன்று காலை திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென பாய்ந்துள்ளார்.
இதில் சிறுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் மாணவி வர்ஷா செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அவரது தாயார் கவிதா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவி வர்ஷாவின் தாத்தா உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாததால் அவரது தந்தை கணேசன் அமரர் ஊர்தி வாகனத்திலேயே அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.
மேலும் இந்த மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


