in

திருமங்கலம் ஏழூர் சப்பரத் திருவிழா

திருமங்கலம் ஏழூர் சப்பரத் திருவிழா

 

திருமங்கலம் அருகே ஏழூர் சப்பரத் திருவிழா: தலைச்சுமையாக கொண்டு வரப்பட்ட 33 முதல் 50 அடி சப்பரங்கள் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஏழு கிராம மக்கள் சார்பில் சமூக ஒற்றுமைக்கு இலக்கணமாக நடைபெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் ஏழூர் சப்பர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது, ஏழூர் திருவிழா. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலாம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளான்குளம், சத்திரபட்டி ஆகிய 7 கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஒருசேர திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

600 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திருவிழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் இத்திருவிழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழா வரலாறு:

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி பகுதியில் நவாப்புகளின் படையெடுப்பு காரணமாக ஒரு மூதாட்டி ஆறு பெண் குழந்தைகளுடன் மதுரையம்பதியின் தெற்கு பகுதிக்கு வந்துள்ளார். அவர்கள் வந்த பின்னர் தான் டி.கல்லுப்பட்டி பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்ததாக வரலாறு கூறுகிறது.

இதனால் டி.கல்லுப்பட்டி மக்கள் அவர்களை அன்போடு கவனித்து வந்தனர். பின்னர் வளர்ந்த அந்த 6 பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முயன்றபோது, அப்பெண்கள் தங்களை தெய்வ குழந்தைகள் என்றும், ஆதிபராசக்தியின் வடிவம் ஆகிவிடுவோம் என்றும் கூறி ஜோதியில் மறைந்தனர்.

இந்த ஐதீகத்தின்படி தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலாம்பட்டியில் மகாலட்சுமியாகவும், அம்மாபட்டியில் பைரவியாகவும், காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளான்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாகவும் கிராம மக்கள் அவர்களை வழிபட்டு வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அம்மாபட்டியை தவிர பிற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களது ஊர் சப்பரத்தை வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு செய்தனர். ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 50 அடி வரை இருந்தது.

அதன்படி கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலைச்சுமையாகவே அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். கிளான்குளம், சத்திரபட்டி சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்துகொண்டு வரப்பட்டது.

இதையடுத்து வி.அம்மாபட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்து பெண்கள் சாமி கும்பிட்டனர். பின்னர் விழா முடிந்து ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களது ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமங்களுக்கு திரும்பினர்.

பொதுவாக சப்பரங்கள் மற்றும் தேர்களை வடம்பிடித்து அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் சப்பரங்களை தங்களது தலைச்சுமையாக தூக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சப்பர திருவிழாவையொட்டி டி.கல்லுப்பட்டி உள்பட 7 கிராமங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சிறப்புடன் செய்திருந்தனர்.

What do you think?

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை திறப்பு