₹1.10 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம் திறப்பு
வேப்பத்தூரில் ₹1.10 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம் திறப்பு
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வேப்பத்தூர் பேரூராட்சியில், மூலதன மானிய திட்டத்தின் கீழ் ₹1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி, பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 அரசு கட்டிடங்கள் திறப்பு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான், தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக்கூடக் கட்டிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 43 அரசு கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து அமைச்சர் கருத்து
நீட் தேர்வு குறித்து பேசிய அவர், இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்றார்.
மேலும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுமையாக விலக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் வலியுறுத்தலாகும் என்றும், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

