34 கிலோ குட்காவுடன் அரசு பேருந்து நடத்துனர் கைது
அரசு வேலையில் இருந்து கொண்டே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்த அரசு பேருந்து நடத்துனர் கைது, 34 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்கள் பறிமுதல்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக திருப்பதி சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனர் பணியில் இருந்து கொண்டே போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நடத்துனரால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் புவனகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான்கான் இவர் அரசு பேருந்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிதம்பரம் முதல் திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி வரும் நிலையில்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதை பொருட்களை நடத்துனர் திருப்பதியில் இருந்து கடத்தி வந்து சிதம்பரம் நகர பகுதியில் விற்பனை செய்வதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சிதம்பரம் பேருந்து நிலையம் வந்த அரசு பேருந்தில் போலீசார் சோதனை செய்தபோது ஓட்டுநர் பின் பக்கம் மறைத்து வைத்திருந்த ஹான்ஸ் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து நடத்துனர் ரகுமான்கானை கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட 34 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கடந்த ஓராண்டு காலமாக திருப்பதியில் குறைவான விலைக்கு ஹான்ஸ் வாங்கி வந்து சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து வரும் நிலையில் மேலும் அவருடன் அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுநருக்கு இந்த ஹான்ஸ் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் ஹான்ஸ் கடத்தி வரப்பட்ட அரசு பேருந்தையும் பறிமுதல் செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


