சட்டசபையில் நேரு எம்எல்ஏ பொதுமக்களுடன் தர்ணா
புதுச்சேரி.. பெண் பாலியல் பலாத்காரம்.. சட்டசபையில் நேரு எம்எல்ஏ பொதுமக்களுடன் தர்ணா… தற்காலிக சபாநாயகருடன் வாக்குவாதம்..
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் 4 கொலை நடந்துள்ளது.
இதில் வில்லியனுாரில் நர்ஸ் காதலிக்க மறுத்ததால் ரவுடியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும் அதனை போலீசார் மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்எல்ஏ, இன்று பொதுமக்களுடன் சட்டசபைக்கு காலை வந்தார். சட்டசபை காவலர்கள் தடுத்ததையும் மீறி அவர் உள்ளே நுழைந்தார். அவருடன் பொதுமக்களும் உள்ளே நுழைந்தனர்.
அங்கு சட்டசபை மைய மண்டபம் செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்து நேரு எம்எல்ஏ தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது அரசுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை மூடி மறைக்கக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர். தகவலறிந்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சட்டசபைக்கு வந்தார். அவர் நேரு எம்எல்ஏவை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் சமாதான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. நேரு எம்எல்ஏக்கு ஆதரவாக பொதுமக்கள், தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்பழகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுமார் 45 நிமிடம் தர்ணா போராட்டம் நடந்தது.
தொடர்ந்து நேரு எம்எல்ஏ சட்டசபைக்கு வெளியே வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வந்தார். அவருடன் பொதுமக்களும் வந்தனர். அங்கு அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நேரு எம்எல்ஏ, பெண்ணுக்கு அதீத கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. காமகொடூரனால் ஏழை பெண் சீரழிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் எந்த நிலையில் உள்ளார் என தெரிவிக்கவில்லை. இது திட்டமிட்டு மறைக்கப்பட்ட சதிசெயலாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநலம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
குற்ற சம்பவம் ஒரு நபரால் நிகழ்த்தப்பட்டதா? அல்லது பல பேரால் நிகழ்ந்ததா? என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து வழக்குபதிந்து சிறையில் அடைத்து ஒரு மாதத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து மிக கடும் தண்டனை பெற்று தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசு செயல்பாட்டில் இல்லை என்பதை புதுவையில் தொடர்ந்து நடந்து வரும் குற்றசம்பவங்களே எடுத்துக்காட்டாக உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை காமக்கொடூரர்களால் சீரழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
கொலை, கொள்ளை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலைகள் அரங்கேறி இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என கூறினார். இதனையடுத்து நேரு எம்எல்ஏ பொதுமக்களுடன் அங்கிருந்து கலைந்து சென்றார்.


