டோரதி’ படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
சமூகத்தில் ஒரு சிறிய உரையாடலையும், புதிய பார்வை மாற்றத்தையும் இந்த திரைப்படம் உருவாக்கியிருப்பது : ‘டோரதி’ படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்துக்கு திண்டுக்கல்லில் ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
‘டோரதி’ திரைப்படம் செப். 25-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களின் வரவேற்பை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல்லுக்கும் உள்ள ராஜேந்திரா திரையரங்கத்திற்கு படக்குழுவினர் வந்தனர்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது:
‘டோரதி’ படத்துக்கு சென்னையில் முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மாலை காட்சியில் திரையரங்கம் நிறைந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்து மகிழ்ச்சியுடன் வெளியேறுவதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

‘டோரதி’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டன. திண்டுக்கல்லில் சுமார் 15 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படமாக்கப்பட்ட காட்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், இந்தப் படம் டொராண்டோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அங்கும் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக படத்துடன் இணைந்து, எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.
‘டோரதி’ என்ற பெயர் ‘கடவுளின் பரிசு’ என்ற பொருளைக் கொண்டது. படத்தில் ஆண்கள் நிறைந்த குடும்பத்துக்குள் தேவதை போன்ற பெண் ஒருவர் வருவது போன்ற கதைக்களம் இருப்பதால் இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டது.
சமூகத்தில் ஒரு சிறிய உரையாடலையும், புதிய பார்வை மாற்றத்தையும் இந்த திரைப்படம் உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மொழி, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து சினிமா ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் என்பதற்கு இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.

