உலக இதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் விழிப்புணர்வு
உலக இதய தினத்தை முன்னிட்டு வள்ளியூரில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் ரூ.1 லட்சம் பரிசை வென்ற ராமநாதபுரம் இளைஞர்.
உலக இதய தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் மருத்துவமனை சார்பில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயத்தை வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என 500-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வர்ஷா என்ற 3 வயது சிறுமி தனது தந்தையுடன் இணைந்து ஓடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பந்தய தூரத்தைக் கடந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமர் என்ற இளைஞர் முதலிடம் பிடித்து, ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார்.

இதுகுறித்து இதய நோய் நிபுணர் டாக்டர் கால்வின் கூறுகையில், உலகளவில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் இதய நோயால் ஏற்படுவதாகவும், முறையான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் இதனைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் தினமும் நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

