நாகை மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு
நாகை மாவட்டத்தில் ரூ.18 கோடியில் 28 புதிய கட்டிடங்கள் திறப்பு; ரூ.1.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஷாஜஹான் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வகக் கட்டிடத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.18 கோடி மதிப்பீட்டில் 28 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 34 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டமும்’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சியினர் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தலைமை தேர்தல் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டு ஜனநாயக சீர்குலைவுக்கு வித்திட்டுள்ளார். அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதன் விளைவாகவே கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.
பாசன வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


