சட்டமன்ற மரபுகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் – தற்காலிக சபாநாயகர் அன்பழகன்
மக்கள் பிரதிநிதிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்
புதுச்சேரி: 16-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்டமன்ற மரபுகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் சட்டப்பேரவை செயலாளர் தயாளன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும், கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவரில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகளை மட்டுமே எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துணைநிலை ஆளுநர் உரையாற்றும் போதும், முதலமைச்சர் பட்ஜெட் உரையாற்றும் போதும் குறுக்கீடுகளை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய காரணமின்றி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தினமும் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்று, மற்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் விவாதங்களையும் கவனமாகக் கேட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவகாரங்களை சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்களை அவையில் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து, சட்டமன்ற மரபுகள் மற்றும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வலியுறுத்தினார்.
இந்தப் பயிற்சி முகாமில் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், திமுக, காங்கிரஸ், டி.வி.கே. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
