in

தேனியில் அரசு நில அளவையர் உட்பட 6 பேர் மீது நில மோசடி, கொலை மிரட்டல் புகார்; ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தேனியில் அரசு நில அளவையர் உட்பட 6 பேர் மீது நில மோசடி, கொலை மிரட்டல் புகார்; ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை பகுதியில் பொதுப் பாதையை மறைத்து முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாகவும், இதற்கு அரசு நில அளவையர் மற்றும் இடைத்தரகர்கள் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடும்பாறை இந்திரா நகரைச் சேர்ந்த ஏ. பால்பாண்டி என்பவர், மயிலாடும்பாறை கிராமத்தில் சர்வே எண் 398/1C1-ல் உள்ள 5,265 சதுர அடி நிலத்தையும், அதற்குச் செல்லும் 13 அடி அகல தென்-வடல் பொதுப் பாதையையும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முறையாக கிரயம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சொத்தில் வில்லங்கங்கள் ஏதும் உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு கட்டணம் செலுத்தி, கடந்த ஜூலை 27-ஆம் தேதி பிர்க்கா சர்வேயர் கோபிசங்கர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டதாகவும், அதில் 13 அடி பொதுப் பாதை உள்ளிட்ட சொத்து உரிமை தொடர்பான விவரங்கள் அரசு ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு தனிப்பட்டா வழங்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மயிலாடும்பாறை குறுவட்ட அளவையர் முரளிதரன், மனுதாரருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல், அரசு கட்டணமும் செலுத்தப்படாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு “13 அடி பொதுப் பாதை இல்லை” என போலியான ஆவணங்களின் அடிப்படையில் நான்குமால் சான்று வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சான்றை பயன்படுத்தி முறுக்கோடையைச் சேர்ந்த மணிகண்டன், குமார் உள்ளிட்ட நிலத் தரகர்கள் மற்றும் பத்திர எழுத்தர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி பொதுப் பாதையையும் சேர்த்து முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக பால்பாண்டி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து சர்வேயர் முரளிதரனிடம் நியாயம் கேட்டபோது, அவர் அலட்சியமாக பதிலளித்ததுடன், மணிகண்டன், குமார், காத்தமுத்து, ஜெயசக்திகுமார் மற்றும் வீரபாண்டி ஆகியோருடன் இணைந்து தன்னை இடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாகவும், மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பத்திரப் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அரசு நில அளவையர் முரளிதரன், பத்திர எழுத்தர் பாலகிருஷ்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பால்பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா வழங்குவதைத் தடுக்க வேண்டும் என்றும் பத்திரப் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: அன்பில் சுந்தரபாதம்

What do you think?

Real Money Casino for Players: A Comprehensive Guide

போரூரில் வாகன ஓட்டியிடம் போக்குவரத்து போலீசார் வாக்குவாதம்; வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு