in

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

 

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

​கர்நாடக மாநிலத்தில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

​இன்று காலை முதலே இரு மாநிலங்களுக்கும் இடையே இயல்பான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், ‘கன்னட ஜாக்ருதி வேதிகே’ என்ற அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தமிழக-கர்நாடக எல்லையான கர்நாடக நுழைவுப் பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனர்.

​கன்னட அமைப்பினரின் இந்த வருகையையும் எதிர்ப்பையும் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக எல்லையான ஜூஜூவாடிப் பகுதியில் அனைத்துப் பேருந்துகளும், கனரக மற்றும் இலகுரக வாகனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

​இதன் காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தமிழகப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வாகனங்கள் எல்லை தாண்டிச் செல்ல முடியாத சூழல் நிலவியதால், பயணிகள் அனைவரும் ஜூஜூவாடி எல்லையிலிருந்து கர்நாடகப் பகுதிக்கு நடந்து சென்று வேறு வாகனங்களைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

​இதனிடையே, சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா மற்றும் அவருடன் வந்த 50-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றம் தணிந்தது.

​தற்போது தமிழக-கர்நாடக இடையே போக்குவரத்து முழுமையாகச் சீரடைந்து, ஜூஜூவாடி எல்லை வழியாக வழக்கம்போல பேருந்துகளும் பிற வாகனங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன.

What do you think?

ஓசூர் ஓம் சக்தி கோவிலில் ஆடி அமாவாசை வேள்வி பூஜை

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்